Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

ஏகலைவ பூமி

சி. சிவசேகரம்

தேசிய கலை இலக்கியப் பேரவை

---------------------------------------------

ஏகலைவ பூமி

சி. சிவசேகரம்

முதல் பதிப்பு- மே 1995

அச்சு- சூர்யா அச்சகம், சென்னை- 41.

வெளியீடு- தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1, தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை- 600 002.

ரூ. 10

--------------------------------------------------

பதிப்புரை

கவிஞர் சிவசேகரம் அவர்களின் "செப்பனிட்ட படிமங்கள்", "தேவி எழுந்தாள்" ஆகிய கவிதை நூல்களையும் "பணிதல் மறந்தவர்" என்ற மொழிபெயர்ப்புக் கவிதை நூலையும் இரண்டாவது பதிப்பாக "நதிக்கரை மூங்கில்" கவிதை நூலையும், 'சவுத் ஏசியன் புக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்ட நாம் அவரது ஐந்தாவது கவிதை நூல் முயற்சியாக 'ஏகலைவ பூமி'யை வெளியிடுகின்றோம்.

இந்நூல் ஒருவருடம் முன்னதாகவே வந்திருக்க வேண்டியது. தமிழ்நூல் பதிப்புத்துறையில் ஏற்படும் நெருக்கடி எம்மையும் விட்டுவைக்கவில்லை. தாமதமாகி விட்டது.

கவிஞர்களைப் பற்றி, இலக்கிய கர்த்தாக்களைப் பற்றி ஆளுக்கொருவராக குழுக்க்ளுக்கேற்பவராக- உச்சி மீது வைத்து ஏற்றிப் போற்றும் பாங்கு அண்மையில் தமிழ் சமூகத்தில் தீவிரமடைந்துள்ளது.

விமர்சனமென்று போற்றவோ-தூற்றவோ, நல்லதென்று பாராட்டவோ- கெட்டதென்று பாராமுகமாய் ஒதுக்கிவிடவோ தயவு செய்து வேண்டவே வேண்டாம்.

கவிதைகளைப் படிக்கவும் அவை தனிமனித- சமூக சிந்தனையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி விவாதிக்கவும் அபிப்பிராயங்களில் மாறுபடுவதிலும் ஒன்றுபடுவதிலும் எம்மை நாம் ஒருமுகப்படுத்துவதற்கு பழகிக் கொள்வோம்.

நன்றி.

தேசிய கலை இலக்கியப் பேரவை

14, 57வது ஒழுங்கை,

கொழும்பு-6

---------------------------------------------------

உள்ளே

கவிதை பற்றியும் கவிதைகள் பற்றியும்

இந்த எழுத்து

கடன் பற்றிய ஒரு மூன்றாமுலகப் பார்வை

பஞ்சம்

ஏகலைவ பூமி

பாட்டனாரின் பேரர்கள்

தொலைவும் இருப்பும்

சுற்றாடலுக்கு ஒரு எழுச்சிப் பாடல்

தாராளவாதி

குன்றத்துக்கும்மி

விமோசனம்

வசந்தம்

ஒரு காதற் பொழுது

ஒரு சனொக்கிழமை நினைத்தது

நல்வரவு

விபசாரம்

சிறை: இரகசியம்

முறுவல் முக்கியமானது

எல்லாந் தெரிந்தவன்

விடுதலையின் விலை

ஒரு மரணம்

அவன் என்னை நேசிக்கிறான்

சுபவேளை

புனிதமானவை

புதியபூமி

------------------------------------------------

கவிதை பற்றியும் கவிதைகள் பற்றியும்

கவிதை என்றால் என்ன என்பது வடிவஞ்சார்ந்த ஒரு பிரச்சனையாகவே மரபுவாதிகளாற் கருதப்பட்டு வந்ததை நாமறிவோம். செய்யுளுக்கு உகந்தனவாக மரபு அடையாளங்கண்ட வடிவங்களில் எழுதப்பட்டு அவற்றுக்குரிய யாப்பு விதிகளை மீறாத ஆக்கங்களே கவிதைகளாக ஏற்கப்பட்டன. காலத்தையொட்டித் தமிழ்ச் செய்யுளின் வடிவம் விருத்திபெற்று வந்ததை மரபுவாதிகள் கணிப்பிலெடுத்தாலும் இவ்வாறான மாற்றங்கள் சமகாலத்திற்கும் பொருந்துமென்று அவர்கள் ஏற்க ஆயத்தமாக இல்லை. ஓசை நயம் என்பது மரபினால் அடையாளங் காணப்பட்ட எதுகை, மோனை மற்றுஞ் சந்த ஒழுங்கு தொடர்பான யாப்பு விதிகட்குட்பட்ட ஒன்றாகவே இன்னமும் மரபுவாதிகளாற் கருதப்படுகிறது.

அதே வேளை மரபை அறியாமையே புதுக்கவிதையாளர்க்குரிய ஒரே தகுதி என்ற மனோபாவம் சில புதுக்கவிதையாளரிடமும் விமர்சகர்களிடமும் காணப்படுகின்றது. புதுக்கவிதைக்கு ஓசைநயம் அவசியமில்லை என்ற வாதமும் மரபுசார்ந்த அலங்காரப் பண்புகள் கவிதைக்கு வேண்டாதவை என்ற வாதமும் புதுக்கவிதை என்பது மரபுக்கவிதை என்பதன் எதிச்சசொல் என்ற நிலைப்பாட்டினின்று தான் பிறந்தனவோ தெரியவில்லை. மரபுசார்ந்த கவிதையையும் சீரான சந்த அமைப்பையுடைய கவிதையையும் சமகாலத்துக்கு ஒவ்வாதன என்று கருதுவோரும் உள்ளனர். அண்மைக் காலத்தில் முருகையன் எழுதிய கவிதைகள் யாவும் வெறும் சொல்லடுக்குக்கள் என்று ஒருவர் நிராகரித்து எழுதியிருந்தார். முருகையன் கவிஞரே இல்லை என்றும் யாரோ ஒருவர் பேசியதாகச் செய்தி பிரசுரமாயிருந்தது. இங்கே, வெறும் அரசியற் கருத்து வேறுபாடு விமர்சகரால் கவித்துவத்தைக் காணமுடியாமல் மறிக்கிறது. வடிவத்தின் அடிப்படையிற் கவிதையை நிராகரிப்பதாயின் தீவிரமரபுவாதிகள் சண்முகம் சிவலிங்கத்தை நிராகரிக்க இயல்வது போல மரபின் மறுப்பாளர்கள் மகாகவியையும் நிராகரிக்க இயல வேண்டும்.

எவர் என்ன சொன்னாலும், நமக்கு இன்று அந்நியப்பட்டுப்போன ஒரு மொழியான சங்ககாலத் தமிழில் உள்ள கவிதைகள் தமிழ்க் கவிதையின் ஒரு உச்சநிலையைக் குறிக்கின்றன. தமிழ்க் கவிதை பற்றிப் பேசுவோர் சங்கக் கவிதைகளைக் குறிப்பிடாமல் ஒரு முழுமையான சித்திரத்தை வரைய முடியாது. சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் நிராகரிப்பது சிலருக்குப் புரட்சிகரமானதாகத் தோன்றலாம். ஆயினும் பாமரத்தனம் புரட்சியாகி விடாது. இன்றுங்கூட பாரதியின் மரபுசார்ந்த கவிதைகளின் வேகமும் வீச்சும் மிக அருமையாகவே புதுக்கவிதையாளர்களால் எட்டப்பட்டுள்ளது.

மரபுக் கவிதை என்றால் வெறும் கட்டுப்பெட்டித்தனம் என்று கருதுகிறவர்கள் மரபுக்கும் நவீனத்துவத்துக்குமிடையிலான உறவை உணராதவர்கள். மரபுடனான முறிவு பூரணமான முறிவாகவே இருக்க அவசியமில்லை. புதியது ஒரு திசை மாற்றத்தைக் குறிக்கிறது. அதற்காக அது பழையதன் நல்ல பண்புகளை எல்லாந் தூர எறிந்து விடாது. மரபுக்கவிதையின் சில பண்புகளைப் புதுக்கவிதையில் பயன்படுத்தும் நல்ல கவிஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மரபு சாராத கவிஞர்கூட மரபை அறிந்திருப்பது அவரது படைப்பிற்கு வலுவூட்டும் என்பது என் மதிப்பீடு.

புதுக் கவிதையின் வருகை தமிழ்க் கவிதைக்குச் சாத்தியமான கவிதை வடிவங்களின் எண்ணிக்கையை எல்லையின்றி விஸ்தரித்தது. இதன் விளைவான கட்டற்ற தெரிவு புதுக்கவிதையின் வருகைக்கு முன் இருந்த தெரிவை உள்ளடக்கக் கூடாது என்பது மெய்யாக இன்னொரு வகையான கட்டுப்பெட்டித்தனந்தான்.

2

நல்ல கலை, இலக்கியம் பிரசாரஞ் செய்யாது என்ற வாதம் கேட்டுப் புளித்துப்போன ஒன்று. கலை-இலக்கியங்கள் எக்காலத்திற் பிரசாரஞ் செய்யாமல் இருந்தன என்று கூற எங்கள் தூய கலை-இலக்கியவாதிகட்கு முடியாது. பிரசாரத்தைக் கருத்திற் கொள்ளாமல் எழுதப்பட்ட ஒரு படைப்பும் சிலசமயம் கடுமையான பிரசாரக் கருவியாகி விடுகிறது. ஒரு படைப்பாளி தனது படைப்பிற்கும் தனது சமுதாயத்திற்கும் உள்ள உறவை முற்றாகவே துண்டிக்க வேண்டும் என்று எவருங் கூற முடியாது. ஒரு படைப்பாளியின் சமுதாய உணர்வு அதன் வளர்ச்சிக்கும் கூர்மைக்குமேற்பத் தன்னை அவரது படைப்புக்களில் வெளிக்காட்டும். அவரது கலையுணர்வும் செய்நேர்த்தியும் அவரது படைப்பின் கலைத்தனமைக்கும் அழகிற்குங் கூடிய அழுத்தத்தை வழங்குவன.

ஒரு படைப்பாளி எவ்வளவு சமுதாய உணர்வுடையவராக இருப்பினும் அவரது சமுதாய உணர்வு அவரது படைப்புக்கள் அனைத்திலும் ஒரே அளவிலும் ஒரே விதமாகவும் வெளிப்பட முடியாது. ஆயினும் சமுதாய உணர்வற்ற ஒருவரது படைப்புக்களினின்று சமுதாய உணர்வுள்ள ஒருவரது படைப்பை வேறுபடுத்துவது சாத்தியமானதே. ஒரு காதற் கவிதையிற் கூட மனித சமத்துவம் பற்றிய உணர்வு தன்னை வெளிக்காட்டும். ஒரு தாலாட்டுப் பாட்டிற் கூடச் சமுதாய மறுமலர்ச்சிக்கான சிந்தனை இழையோட முடியும். ஒரு படைப்பாளியின் பல வேறு ஆக்கங்கள் அவரது சிந்தனையினதும் உணர்வுகளினதும் வேறுபட்ட கோணங்கள்.அவற்றிடையே தோற்றப்பாடாக உள்ள முரண்பாடுகளிடையே மிகுந்த ஒருமையையும் நாம் காணமுடியும்.

ஒரு புரட்சிகர இலக்கியவாதி எதற்காக எழுதுகிறார் என்பதிற் பூரண தெளிவு இருக்கலாம். ஆயினும் அவர் எதை எப்படி எழுதலாம் என்று விதிப்பது இயலாத காரியம். அவரது எழுத்தின் விருத்தி சமுதாய நடைமுறையுடன் சேர்ந்தே நிகழ்கிறது. ஒருவர் தனது அனுபவத்தை நிராகரித்து எழுத முடியாது. எழுத்தின் விருத்தியில் விமர்சனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. விமர்சனம் என்பது அழகியல் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது அழகியல் வாதிகளது நிலைப்பாடு. ஒரு படைப்பின் அரசியற் சமுதாய முனைப்பை விமர்சிப்பதை இவர்கள் விரும்புவதில்லை. ஒரு படைப்பாளி எதை எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது என்ற வாதம் எனக்கு ஏற்புடையது. ஆயினும் அந்தப் படைப்பு எத்தகைய முனைப்பையுடையது என்பதைச் சுட்டிக்காட்டும் பொறுப்பும் உரிமையும் எவருக்கும் இருக்கலாம். நிறவாதத்தையோ மதவெறியையோ தூண்டும் இலக்கியத்தையோ ஆணாதிக்கத்தையோ சாதியத்தையோ நியாயப்படுத்தும் ஒரு படைப்பையோ வெறுமனே அழகியற் கண்ணோட்டத்தில் விமர்சிப்பது எவ்வகையிலும் நேர்மையான காரியமல்ல. சமூகச் சீரழிவை ஊக்குவிக்கும் படைப்புக்களை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்திலான படைப்பக்களை ஊக்குவிப்பதும் கலை இலக்கியங்களைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டதினின்று விமர்சிப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப்பணி சார்ந்தது.

பாட்டாளி வர்க்கத்தின் கலை இலக்கியங்கள் வெளிவெளியான போராட்டக் கோஷங்களாகவே அமைய அவசியமில்லை. பலசமயம், வெறும் கோஷங்களின் அரசியலும் பலவீனமானதே. மனிதத் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணித்துக் கலை இலக்கியங்களைப் படைக்க முடியாது. இந்தத் தேவைகளையும் உணர்வுகளையும் தனிமனிதருக்கே உரியனவாக்கி மனிதரைச் சமூகத்தினின்று பிரித்துத் தனிமனிதத்துவத்தை சமுதாயத்துக்கு முரண்பட்டதாக வளர்க்கும் போக்கு மனித இருப்பின் முக்கியமான ஒரு பகுதியை மறுக்கிறது. பாட்டாளி வர்க்கப் பார்வை மனிதனது இருப்பின் சமுதாயத் தன்மையை வலியுறுத்தி மனிதரது தனித்துவத்தை அங்கீகரிக்கிறது. தனிமனிதரது தேவைகளும் உணர்வுகளும் சமுதாயத்தினின்று பிரித்துப் பார்க்கப்படாமல் உறவுபடுத்திப் பார்க்கப் படுகின்றன. ஒரு படைப்பின் தொனி அதன் படைப்பாளியின் சமுதாயச் சார்பாலும் குறிப்பான சமுதாயச் சூழலாலும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மனித இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கிவரும் ஒரு சமுதாய அமைப்பிற்கு எதிரான போராட்ட உணர்வை வலியுறுத்துவது பற்றி மாக்ஸியவாதிகள் கூச்சப்படவில்லை. சமுதாய உணர்வை ஒருவர் வலியுறுத்த முடியுமேயன்றி அதை இன்னொருவரது படைப்பில் வற்புறுத்தித் திணிக்க முடியாது.

3

என்னுடைய எழுத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை என்னால் உணர முடிகிறது. குறைவாகவேனும் என்னை வந்தடையும் என் எழுத்துப் பற்றிய விமர்சனங்களுக்கு அவற்றில் ஒரு பங்குண்டு. மரபுக் கவிதை, புதுக்கவிதை என்று வேறுபடுத்தி எனது கவிதைகளை எழுதும் நிர்ப்பந்தம் எனக்கில்லை. ஒரு கவிதை மனதில் எழும் சூழ்நிலையும் கவிதையை எவ்வாறு வெளிப்படுத்தின் அதன் தாக்கம் அதிகமாயிருக்காக் கூடும் என்ற எண்ணமும் கவிதை வடிவத்தின் தெரிவுக்குக் காரணமாகின்றன. மரபு சார்ந்து எழுதுவதற்காக வார்த்தைகளை வலிந்து திணிக்கும் நிர்ப்பந்தம் மரபுக் கவிதையின் பழக்கமும் பயிற்சியும் உள்ளவர்கட்கு இருக்க அவசியமில்லை. பாடலுக்கு உகந்த சந்த வடிவங்களின் தேவை இன்னமும் உள்ளது. பாடக் கூடியது என்பதால் ஒரு கவிதையின் கவித்துவம் குறைந்து விடாது. எதுவித சந்தத்தையும் பேணாமற்கூடக் கவிதைகளில் வார்த்தைகளைத் திணிக்க முடியும். ஒருவர் குறிப்பிட்ட ஒரு கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுப்பது அவ்வடிவத்துடனான பரிச்சயம், ஈடுபாடு, பரீட்சித்துப் பார்க்கும் முனைப்புப் போன்ற காரணங்களின் விளைவானதாக இருக்கலாம். அத் தெரிவு பொருத்தமற்றதாகவும் இருக்கலாம். தெரிவுகள் எவையுமே வெற்றியின் உத்திரவாதத்துடன் வருவதில்லை.

இத்தொகுதியின் கவிதைகளில் இசைக்கப்படக் கூடிய வடிவில் மூன்று உள்ளன. இன்னுமொன்று சீரான மரபு சார்ந்த சந்த வடிவிலானது. மற்றையவை வடிவில் மரபுடன் எளிதாக உறவு காட்ட முடியாதவை. பெண்கள் நிலை தொடர்பான கவிதைகள் புவனம் என்ற புனைபேரில் (கனடா) தாயகத்தில் வெளியானவை. அந்தப் பேர் என் அம்மாவுடையது. பெண்கள் நிலைபற்றிய கவிதைகட்கு அந்தப் புனைபேரின் தெரிவு பலவழிகளிலும் பொருத்தமாதுதான். இக்கவிதைகளுட் சர்வதேச நிலவரங்கள் தொடர்பானவை சில (நோர்வே) சுவடுகளிற் பிரசுரமானவை. இம்முறை காதற் கவிதை ஒன்றும் உள்ளது. இரண்டு வருடம் முன்பு பாரிஸிலிருந்து வந்த பாரிஸ்முரசு வார ஏட்டில் பிரசுரமான ஒரு கவிதையும் (ஒல்லாந்து) அ.ஆ.இ. யில் வந்த ஒன்றும் இங்குள்ளன. நான் விரும்பியதை விடக் குறைவாகவே தேசிய கலைஇலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தில் எழுத முடிந்தது. இத்தொகுதியின் இரண்டு கவிதைகள் மட்டுமே அதிற் பிரசுரமாயின. சகல பத்திரிகை ஆசிரியர்களது ஊக்குவிப்புக்கும் எனது நன்றி.

இறுதியாக என்னுடைய முன்னைய கவிதைத் தொகுதிகளைப் பிரசுரிப்பதிற் போன்று இத் தொகுதியையும் பிரசுரிப்பதில் அக்கறை காட்டிய தேசிய கலை இலக்கியப் பேரவை நண்பர்கட்கும் அச்சிட்டு வெளியிடும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினருக்கும் எனது நன்றிகள்.

சி. சிவசேகரம்

1. 1. 94

லண்டன்

----------------------------------------------------------

இந்த எழுத்து

இந்த எழுத்துக்

கவிதையாகலாம் காவியமாகலாம்

சிறுகதை நெடுங்கதை நாவலாகலாம்

ஆய்வு விமர்சனம் விவரணமாகலாம்

சிரிக்கத் தூண்டும் துணுக்காய் இருக்கலாம்

விளக்கமாகலாம் விடுகதையாகலாம்

கனல் தெறிக்கின்ர கோஷமாகலாம்

காவித்திரியும் ஸ்லோகமாகலாம்

பேர் குறியாத புதுப்படைப்பாகலாம்

அச்சிற் பதித்து நூலுருப் பூண்டு

புத்தகக் கடைகளில் விற்பனையாகலாம்

பதுங்கி மறைந்து களவாய் புழங்கலாம்

கையெழுத்தாகவே பலருங் காணலாம்

பரவு முன்னரே பறிக்கப் படலாம்

பற்றி எரியலாம்

சாம்பலினின்றும் மீண்டும் உயிர்க்கலாம்

உலகம் அதனை மறந்தே போகலாம்

இந்த எழுத்து-

ஓ, மதிப்பீட்டாளரே

பிறப்பவையாவும் இறப்பது உறுதி

என்வே மீண்டும்

அடித்துச் சொல்கிறேன்

இந்த எழுத்து

கற்பக தருவிற் காகிதஞ் செய்து

அமிர்தங் குழைத்து அச்சிற் பதித்த

அமர காவியம் இல்லவே இல்லை

மனித இனத்தின் மேன்மை பேண

ஒடுக்குமுறைக்கு எதிராய் இணைந்து

ஓங்கி உயருங் கைகளில் வாளாய்

நீளுந் துவக்காய்

அல்லது அதனுட் சின்னத் துணிக்கையாய்

விரையுங் கால்களிற் செருப்பின் தோலாய்

கொடுமைக் கெதிராய்க் கிளர்ந்தெழும் போரிற்

கோபக் கனலின் சிறுபொறி நன்றாய்

ஒரு கணப் பொழுதே உயிர்த்து மரிப்பினும்

இந்த எழுத்தின் அச் சிறு உயிர்ப்பு

எந்த அமர நிலையினும் உயரும்

----------------------------------------------------------------

கடன் பற்றிய ஒரு மூன்றாமுலகப் பார்வை

என் பாட்டனுடைய வயலை

உன் பாட்டன் பறித்தெடுத்தான்,

என் அப்பனுடைய வீட்டை

உன் அப்பன் திருடினான்,

என் உழைப்பின் பயனை

நீ திருடுகின்றாய்.

நான் உன் வயலில் உழைக்கின்ற

உழவு யந்திரம் போல,

உன் கறவை மாடு போல.

யந்திரத்துக்கு எண்ணெய்,

மாட்டுக்கு பிண்ணாக்கு,

எனக்கு உன் பிச்சைக் காசு.

வயல் வேலை ஒழிந்தால்

யந்திரத்துக்கு ஓய்வு,

அதற்குப் பசிக்காது.

மாட்டுக்கு எப்படியும்

வைக்கலாவது நிச்சயம்.

எனக்குக் கூலி இல்லை - எனவே

வயிற்றுக்கும் வேலையில்லை.

பசி என்று வந்தாற்

பட்ட கடனையும்

வளருகின்ற வட்டியையும்

நினைவூட்டி

முயற்சியின் மேன்மையும்

உழைப்பின் பயனும் பற்றி

உபதேசிப்பாய்,

சேமிப்பின் மேன்மை சொல்வாய்.

என் முயற்சியும் உழைப்பும்

உன் சேமிப்பாயின.

திருநாள் சாவீடு என்று

இடையிடையே

தானமும் செய்வாய்,

உன் வீட்டில் மரணம் என்றால்

என் வயிறு

எதிர்பார்ப்பாற் துள்ளுகிறது.

நீ போடும் சோறு

உன் அப்பனையும் பாட்டனையும்

நாளைக்கு உன்னையும்

மோட்சத்துக்கு கொண்டு போகும்

என்று நீ நம்பினால்

நான் மறுக்க மட்டேன் -

ஏனென்றால்

எனக்கு மோட்சத்தைத் தெரியாது.

என்றாலும்

நீ போடும் சோற்றுக்கு

என்னிடம்

நன்றியை எதிர்பாராதே.

என் பாட்டன் பறிகொடுத்த வயலும்

என் அப்பன் இழந்த வீடும்

நான் தினமும் களவு கொடுத்த உழைப்பும்

வட்டியும் முதலுமாகக்

கணக்குப் பார்த்த போது

தெரிந்தது-

யார் யாருக்குக் கடனாளியென்று.

----------------------------------------------------------------

பஞ்சம்

1

ஈரமற்ற பூமி எங்களுடையது

வெய்யிலை விழுங்குகிறது

சுடுகாற்றைச் சுவாசிக்கிறது

புழுதியாய் மலங்கழிக்கிறது

வரண்ட வயல்வெளிகளில்

தாகமென வாய்பிளக்கிறது

2

வெய்யில் எரித்து மீந்த செடிகளை

ஆடு மாடுகள் விழுங்கி விட்டன

எஞ்சியிருந்த ஆடுமாடுகளை

நாங்கள் விழுங்கி விட்டோம்

நிலவுக்காக வானத்தையும்

விருந்தினர்கட்காக வீதியையும்

பார்த்துப் பழகிய நம் கண்கள்

விமானங்கட்கும் லொறிகட்குமாக

விழித்திருக்கினறன

வீரத்தின் பேராற் போரிட்ட நாங்கள்

விழுந்து கிடக்கும் ரொட்டிக்காகப் போராடுகிறோம்

3

மண்டையோட்டின் ஆழத்தைத் துழாவுகிற

குழந்தையின் அயர்ந்த விழிகளையும்

விலா எலும்பின் அசைவுகளையும்

வெறு வயிற்றின் வீக்கத்தையும்

ஒட்டிய கன்னங்களை விலக்கத் திணறுகிற

வாயையும்

ஏமாற்றும் வரண்ட முலைகளைப்

படமெடுத்துப்

பிச்சைப் பாத்திரங்களில் ஒட்டுங்கள்

விழுகிற சில்லறைகள்

வீசுகிற தருமவான்களின்

மனசாட்சிக்கு ஒத்தடமாகட்டும்

உங்கள் நாகரிகத்தின் மேம்பாட்டுக்குச்

சாட்சியமாகட்டும்

உங்கள் மனிதாபிமானத்தின்

நிரூபணமாகட்டும்

எங்கள் பெருமிதத்தின் புதைகுழிமேல்

நடப்பட்ட சிலுவையாகட்டும்

4

தானியங்களைக் கடலில் வீசும் தேசத்தின்

தலைவர்களிடமும் உரிமையாளர்களிடமும்

பழங்ளை குழிவெட்டிப் புதைத்து

மாமிச மலைகட்கும் வெண்ணெய்க் குன்றுகட்கும்

காவல் கிடக்கும் கனவான்களிடமும்

கை கூப்பிக் கேட்கிறோம்

எங்களுக்கு

உங்கள்

தருமமும் வேண்டாம் தானியமும் வேண்டாம்

முட்டை வெண்ணெய்

பழங்கள் மாமிசம்

ஆடைகள் கம்பளங்கள்

எதுவுமே வேண்டாம்

எங்கள் வளைந்த முதுகுகள் மேற்

சவாரி விடுவோரின்

சட்டிகளிற் பிச்சையாய்

ஆயுதங்கள் போடாதீர்

அது போதும்

உங்கள் கருணை மழை வரண்டு

இன்று நாம் காய்ந்தாலும்

நாளை உயிர்த்தெழுவோம்

----------------------------------------------------------------

ஏகலைவ பூமி

1.

ஓ, பாண்டு குமாரர்களே, கௌரவர்களே,

பல தேசங்களதும் மாரதர்களே,

அனைவரும் வருவீர்.

வந்து

அவரவர் பீடங்களில் ஏறி அமர்வீர்

நும் பட்டங்களையும் பதவிகளையும் விருதுகளையும்

பதாகைகளிற்

கொட்டை யெழுத்துக்களிற் பொறித்து

நும் தலைகள் மேற் தொங்க விடுவீர்.

நும் சாதனைகளை

நீளமானதொரு சீலைச் சுருளில்

திரைப்படுத்திக்

கைகளிற் தாங்கிக் கொள்வீர்.

சான்றிதழ்களாலும் வெற்றிக் கிண்ணங்களாலும் கேடயங்களாலும்

சமைந்த சுவரொன்றால் நீவிர்

நும்மைச் சூழ்ந்து கொள்வீர்.

நும் தோள்களை அலங்கரித்த பொன்னாடைகளும் ஆரங்களும்

நும் தலைகளில் அமர்ந்த கிரீடங்களும்

அலங்காரமாகத் தொங்க

நும் பெருமைகளைப்

புலவோரைப் பாடச் செய்வீர்.

ஏனெனில்

இது

ஏகலைவர்களது பூமி-

இது போல் இன்னோரிடம்

வேறெங்குமே இல்லாது போகலாம்.

2.

ஒரு பாண்டு குமாரனின்

கண்களிற் தெறித்த பொறாமைக்காக,

அவனை இணையற்ற வில்லாளி என

உலகம் வியந்து கொண்டாடுவதற்காக

அறுக்கப்பட்டது

ஒரேயொரு கட்டைவிரல்தானா?

உரிமை மறுக்கப்பட்டவன்

ஒரேயொரு மாவீரன்தானா?

காலங்காலமாக

இத்தனை யுகங்களிலும்

எத்தனை கட்டை விரல்கள்

கருவிலேயே களவுபோயின

பெண்ணாகப் பிறந்ததால்,

நிறமுங் குலமும் மொழியும் வேறானதால்,

நாடும் மதமும் மாறுபட்டதால்,

சுரண்டத் தெரியாத வர்க்கமென்பதால்,

ஏழை என்பதால்

ஏழை என்பதால்

எத்தனை கட்டை விரலகள்

அறுந்து போயின?

இந்த

ஏகலைவர்களின் பூமியில்

எத்தனை கைகள் இயங்காது கட்டுண்டன?

ஏடுகளும் எழுதுகோலகளும்

வீரத்தின் விளையாட்டுக் களங்களும்

எத்தனை பேருக்கு எத்தனைமுறை மறுக்கப்பட்டன?

3.

ஓ, பாண்டு குமாரர்களே, கௌரவர்களே,

பல தேசங்களதும் மாரதர்களே,

உங்களது இந்த இறுதி யுகம் முடிவதற்கு முன்னம்,

உங்களது மூச்சு அடங்கி ஓய்வதற்கு முன்னம்

உங்களது மேம்பாடுகளனைத்தையும் இப்பொழுதே பறை சாற்றுக.

ஏனெனில்

இதுபோல் இன்னொரு கணம்

இனியெப்போதுமே

இல்லாது போகலாம்.

இந்த ஏகலைவர்களது பூமி

மெல்ல அதிர்கிறது.

4.

இன்றைய ஏகலைவர்கள்

கட்டை விரலின்றி நாணேற்றக் கற்றுக்கொள்ளக் கூடும்,

கருவிலே விரலறுக்குங் கைகளை அவர்கள் துண்டிக்கக் கூடும்,

ஏகலைவர்களது அறுந்த விரல்கள்

மீண்டும் ஒருவேளை

முளைக்கவுங் கூடும்.

அவர்கள் இந்தப் பூமியைக் குலுக்கி

பூமி நடுங்கி

வாய் பிளந்து

உம்மை விழுங்கிடு முன்

ஓ, பாண்டு குமாரர்களே...

----------------------------------------------------------------

பாட்டனாரின் பேரர்கள்

பாட்டனார் வீட்டுக்குட்

படியேறி எல்லாரும்

அடிவைக்க முடியாதாம்.

வைக்கிறபேர் அனைவருமே

அமருமென்று சொல்லாமல்

உட்கார முடியாதாம்

அமர்வதற்குத் தகுதியிலார்

கைகட்டித் தம்தோளிற்

துணிகழற்றி நிற்பாராம்

பாட்ட்னார் வளவுக்குட்

கண்டநின்ற பேரெல்லாம்

கால் பதிக்க முடியாதாம்.

வரத்தகுந்த பேரெல்லாம்

முன்படலை வழியாக

உள் நுழைய முடியாதாம்

பின்படலை வழிவருவோர்

குரல்கொடுத்து உத்தரவு

பெற்றாற்தான் வரலாமாம்.

பட்டானார் வாழுகின்ற

தெருவழியே சத்தமாகச்

சிரிப்பதற்கும் முடியாதாம்.

சாவீடு என்றாலும்

பாட்டனார் காதுபடப்

பறையொலிக்க முடியாதாம்.

வீதிவழி பாட்டனார்

வருகையிலே எல்லோரும்

வழிவிலகி நிற்பாராம்.

பாட்டானார் செத்துப்போய்

பலகாலம் இப்போது.

ஊர்ச்சனங்க ளெல்லாரும்

போய்வருவார் தெருவழியே.

வாகனங்கள் விரைந்தோடும்.

வாலிபங்கள் விசிலடிக்கும்.

வாசல்வரை வருவோரை

வழிமறிக்க இயலாது.

வீட்டுக்குள் நுழைவோரின்

சாதிகுலந் தெரியாது.

பணிந்திருந்த சாதியினர்

பயமின்றித் திரிகின்றார்.

போட்டிருந்த சட்டங்கள்

காற்றோடு தூசாச்சு.

ஆண்டிருந்த பரம்பரையின்

அதிகாரங் குறைவாச்சு.

பாட்டனார் குலப்பெருமை

பழங்கதையாய்ப் போயாச்சு.

***

பேரர்மார் சந்திப்பிற்

பாட்டன்மார் காலத்துப்

பழங்கதைகள் பேசிடுவார்.

போயொழிந்த காலத்தின்

மேன்மைகளைக் கீர்த்திகளை

மீட்டுமிக மனம் நெகிழ்வார்

சுற்றிவரும் வரலாற்றின்

பொற்காலம் மீளுமெனத்

தேற்றித் தம்வழி மீள்வார்.

***

அயல் மண்ணில் அனைவருமே

அகதிகளாய் வாழ்ந்தாலும்

கரியவராய் அந்நியராய்க்

கழித்தொதுக்கப் பட்டாலும்

பாட்டனார் இருக்கின்றார்

பழங்கள்ளின் போதைதர.

----------------------------------------------------------------

தொலைவும் இருப்பும்

தெளிவான ஒரு நாளில்

உயரே

விமானத்தின் யன்னலாற்

கீழே பார்க்கையில்,

யாவுமே தெளிவாய்த் தெரிந்தன.

தலைநரைத்த கிழட்டு மலைகள்

குழம்பி வளைந்து நடந்த

குடிகார நதிகள்

களைத்துக் கிடந்த குளங்கள்,

முதுவேனில் சுட்டு மூண்ட நெருப்பின்

இலையுதிர்காலத் தணல் பரந்த

பெரு வனங்கள்,

மனிதர் அரிந்து, அவலமாய்

அவிழ்ந்த வயல்கள்,

புல்லில் வேய்ந்து விரிந்த பசுந் தரைகள்.

எட்ட, உயரத்தே

ஒதுங்கி நின்று பார்க்கையில்,

குன்றுகளை ஒவ்வொன்றாய்த்

தூக்கிக்

கணவாய்கள் மீதாகப்

பாலம் அமைப்பதும்

எரிமலையின் வாய்மீது

பனிமலையை வைத்து

மூடி அடக்குவதும்

கடல்களை எல்லாஞ் சதுரமாகவும்

குளங்களை வட்டமாகவும்

மலைகளைக் கூம்புகளாகவும்

தீவுகளை முக்கோணங்களாகவும்

நதிகளை நேர்கோடுகளாகவும்

கண்டங்களை சமாந்தரமாகவும்

மாற்றி அடுக்குவதும்,

தெளிவாகவே,

மிக எளிதாகத் தெரிந்தன.

சாப்பிட்டு

வாய்துடைக்கத் தந்த

காகிதத்தில்

எல்லவற்றையும்

கவனமாகக்

குறித்துக் கொண்டேன்.

கீழே இறங்கி

நடந்த போது,

மரங்களும் மதில்களும்

வீட்டுக் கூரைகளும்

என்னைவிட உயரமாய்

நின்றன.

காலில்

ஒரு கல் இடறியது.

எழுதிவைத்த காகிதத்தைக்

கசக்கி எறிந்துவிட்டு

கல்லை ஒதுக்கி வைக்க

மெல்லக் குனிந்தேன்.

----------------------------------------------------------------

சுற்றாடலுக்கு ஒரு எழுச்சிப் பாடல்

குப்பை மலை முகட்டிலேறுவோம் கரிய

கங்கைகளில் ஓடம் விடுவோம்

கப்பல்களிற் கொட்டி வழிந்த எண்ணெய்க்

கடற்கரையைக் கண்டு களிப்போம்

என்னவென்று விளங்கவில்லையா எங்கள்

எதிர்காலந் தெரியவில்லையா

பன்னாட்டுக் கம்பெனிக்காரர் செய்யும்

புதுவுலகம் புரியவில்லையா

அமிலமழை நீரிற் குளிப்போம் நைற்றேற்

உப்பு மிகும் நீரைக் குடிப்போம்

பாதரச நீரில் மிதக்கும் மீனைப்

பக்குவமாய்ச் சுட்டுச் சுவைப்போம்

(என்னவென்று...)

கதிரியக்கக் காற்றை முகர்வோம் தெருவிற்

காரீய தூசை நுகர்வோம்

ஓஸோன் துளை வாசல் வழியே விழும்

யூவீக் கதிர்க் கஞ்சி ஒளிவோம்

(என்னவென்று...)

பீவீஸீ காடு வளர்ப்போம் வண்ணப்

பொலித்தீனில் பறவைகள் செய்வோம்

பிளாஸ்ற்றிக்கில் விலங்குகள் வைப்போம்

வைனைல் புல்வெளியிற் சாய்ந்து படுப்போம்

(என்னவென்று...)

கைத்தடிகள் ஊன்றி நடப்போம் கறுப்புக்

கண்ணாடிகள் மாட்டியிருப்போம்

குழாய் வழியே உணவு கொள்ளுவோம் மருந்துக்

குளிசைகளை விழுங்கிப் பிழைப்போம்

(என்னவென்று...)

புதியதொரு உலகம் அமைக்கப் பழைய

மானுடரைக் கொன்று குவிக்கும்

பன்னாட்டுக் கம்பனியாரின் காலிற்

பணிவுடனே வீழ்ந்து கிடப்போம்

----------------------------------------------------------------

தாராளவாதி

ஓய்வாகத் தொந்தி சரியக்

கதிரையிலே சாய்ந்து புதைந்து

சாப்பிட்டது செமிக்கப்

பேசுவீர் உலக விவகாரம்

இடையிடையில்

ஏப்பம் விடுவீர்

நெருப்பெடுத்து ஊதுவீர்

புகையிடையே அனல் உமிழ்வீர்

வாய் வெந்து போகாமற்

கிண்ணத்தில் ஊற்றி

உறிஞ்சித் தணிப்பீர்

மறுபடியுந் தீமூட்டி

நெருப்பாய்க் கொதிப்பீர்

சாய்ந்த உடம்பு

கதிரையிலே பெயராமல்

கண்களால் மின்னி

இடியாய் முழக்குவீர்

சீமைச் சிறைகளிலே

ஓரறைக்கு நாலுபேர்

அதிகம் என அறிவீர்

சீனச் சிறைகளிலே

சிற்றெறும்புத் தொல்லையென

ரஷ்யச் சுரங்கத்தில்

காற்றோட்டம் இல்லையென

வியட்னாம் அகதிகளை

மந்தைகள் போல் கப்பலிலே

ஏற்றுவது கொடுமையெனச்

சீறிச் சினப்பீர்

பிரேஸிலிலே பிள்ளைகட்குப்

பள்ளிப் படிப்பின்றிக்

கூலி உழைப்பில்

இறக்குகிற கொடுமைக்கு

எதிராகக் குரல் கொடுப்பீர்

தோட்டம் உமது

தேயிலையில் லாபமென

ஈட்டும் பொருள் உமது எனவே

மலையகத்துத் தொழிலாளி

வீட்டு வசதி

தோட்டத்துப் பள்ளிகளில்

கல்வித்தரம் உயர்தல்

குறைந்தபட்சக் கூலியெனக்

கேட்டாற் பிசகு

கேளாதீர் விடியுவரை

நீளமாய்ப் பேசுவோம்

உலக விவகாரம்

----------------------------------------------------------------

குன்றத்துக்கும்மி

கும்மியடி தோழி கும்மியடி மலை

நாடு விழித்தெழக் கும்மியடி

நம்மை உறுஞ்சிக் கொழுத்திட்ட அட்டைகள்

காலில் நசிபடக் கும்மியடி

தேயிலை கிள்ளிய கைகளிற் செங்கொடி

கொள்கை ஒளிவிடக் கும்மியடி

ஞாயங்கள் யாவர்க்கும் ஒன்று பொதுவொரு

நீதி எழுந்திடக் கும்மியடி

பள்ளிப்படிப்புக்கும் பட்டம் பதவிக்கும்

பிள்ளைகட்குத் தரம் இல்லையென்றார்

கள்ளங் கபடங்கள் கண்டு கொண்டாயெங்கள்

கல்வியுரிமைக்குக் கும்மியடி

தோட்டத்துக் கூலிக்கு நாட்டு வளப்பமேன்

வோட்டுக்கள் வேண்டியதில்லை யென்றார்

நாட்டை நடத்தவும் ஞாயம் வழங்கவும்

நாங்கள் வல்லோமென்று கும்மியடி

நோய்ப்பட்டு வைத்தியசாலை விறாந்தையில்

வாடிய நாட்களை மாற்றிடுவோம்

நோய்கள் தவிர்க்கவும் நேர்ந்திடின் நீக்கவும்

நல்ல வயித்தியம் நாம் வகுப்போம்

கூடுகள் போல் லயன் காம்பரைச் சீவியம்

கூலியடிமைக்குப் போதுமென்றார்

வீடு வளவுகள் வீதிகள் தோட்டங்கள்

வேண்டும் எமக்கென்று கும்மியடி

நல்ல கலைகளும் கூத்தும் இசையுடன்

நாட்டியம் நாடகம் நாம் படைப்போம்

கல்வி தொழில்களில் நுட்ப நுணுக்கங்கள்

கற்றிடுவோமென்று கும்மியடி

ஆணுக்கும் பெண்ணுக்கும் நீதிகள் வேறில்லை

சாதிப் பிரிவுகள் தேவையில்லை

மானுட சாதியைக் கூறு செய்யும் முறை

மாய்ந்து மடிந்திடக் கும்மியடி

வேலைக்குத் தக்கது கூலியெனில் இங்கு

ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதங்களேன்

கூலிச் சமத்துவம் மாதப் படி முறை

வேண்டும் இனியென்று கும்மியடி

பாடுபடுகிற மானுடர் ஓரினம்

பூமி அவரது என்றுரைப்போம்

நாடு மொழி மதபேதம் அவர்க்கில்லை

நாளை நமதென்று கும்மியடி

ஆலை உழைப்பவர் ஆளுமை நெல்வயல்

ஆழ உழுபவர் தம்முரிமை

நீலக் கடல் மலை ஆறு வனம் வெளி

யாவும் பொது வென்று கும்மியடி

குன்றம் அதிர்ந்திடக் கும்மியடி குரை

கடல் கொதித் தெழக் கும்மியடி

தென்றல் புயலெனச் சீறியெழ நெடு

வானம் நடுங்கிடக் கும்மியடி

----------------------------------------------------------------

விமோசனம்

எங்களை இடறிய

அயலார் கால்கள்

எட்டி உதைத்தன

ஏறி மிதித்தன.

குட்டிக்குட்டிப்

பழகின கைகள்

குட்டக்குட்டக்

குனிந்து கிடந்தோம்.

குனியக்குனியக்

குட்டல் தொடர்ந்தது

குட்டலை நிறுத்தக்

குட்டப் பயின்றோம்.

கற்ற வித்தை

கைவிடல் தீது.

நெடுநாட் பழக்கம்

போவதும் அரிது.

நம்மை நாமே

குட்டிக்குனித்தும்

குனிந்து பணிந்து

குட்டு வாங்கியும்

வலது காலால்

இடதை உதைத்தும்

இடது காலால்

வலதை இடறியும்

எம்மை நாமே

ஏறிமிதித்தும்

அயலார் எம்மை

மிதித்தலை ஒழித்தோம்.

----------------------------------------------------------------

வசந்தம்

எவளோ தேவி கடை விழி சுட்டு

எவனோ தேவன் நாணை ஏற்ற

வான வில்லு சிதறி முறிந்தது

மரங்கள் செடிகள் புற்றரை புதர்கள்

துருவத் தரையிலும் பூக்கள் விரிந்தன

*

புது வெய்யில் காய்ந்துங் காயாத குளிர் காற்றில்

அணில்கள் கிளை தாவித் துளிர்கள் நடுநடுங்கும்

ஸர்ப்பத்தைப் போல வளைந்து படுத்திருக்குங்

குளப் பரப்பில் வெள்ளையாய் அன்னக் குவியல்கள்

வண்ணச் சிறகுகளைக் கரையோரத்து வாத்து

நீவுவதை நின்று ரஸித்துத் திளைத்திடலாம்

நாளை

இன்றைக்கு நாங்கள் நடப்போங் கெதியாக

*

துளிர்த்த கிளைகளிற் பறவைகள்

பேசும் மொழிவஸந்தம்

புற்றரையின் புஷ்பங்களின் பதில்

நயன பாஷையில்

புழுக்கள் மட்டும்

பேசாமல் மண்குடையும்-

என்றும் போல்

நாங்கள் ஓடுவோம்

பாதாள ரயில் ஏற

----------------------------------------------------------------

ஒரு காதற் பொழுது

"சிற்றோடை மீதாகச் சாய்ந்து படுத்திருக்கும்

பாலத்தின் மேலே நீ

உட்கார்ந்து பார் கிழக்கே

பொன்னுருகிச் செம்பாகும் தலைகீழ்ரஸ்வாதம்,

நீலநிறப் புல் பழுத்து நாவல் நிறமாகும்

பச்சை மலை விளிம்பிற் பற்றி நெருப்பெரியும்

மேலைத் திசை நெடுக நீளும் மலைகளிலே

நாளுக்கொரு பரிதி வீழும் எழில் தெரியும்"

என்றான் என் நண்பன்

சொல்லை இடைமறித்துச் சொன்னாள் அவன் தோழி

இல்லையது பொய், நொடியிற் பாதிக் கொரு பரிதி

கண்ணெதிரே தெரியுமென

கண்டிக்கு வந்தொருகாற் பாரென்றார்

ஓமென்றேன்

துணையாக நீ வந்த மாலைப் பொழுதொன்றில்

என் நண்பன் சொன்னதொரு பாலத்தின் சுவர்மேலே

உட்கார்ந்து பார்த்திருந்தோம் பகல் முடிய

ஆனாலும்

பொன்னுருகும் முகிலில்லை, செம்பில்லை

சுட்டெரிந்து

வேகின்ற மலையில்லை, புல்லில்லை

வானத்தின்

செந்நிறத்துச் சூரியனோ சூடாறித்

தண்ணெண்றென்

கைதொட்டுத் தோளோடு சாய்ந்திருந்த நொடித்துகளில்

----------------------------------------------------------------

ஒரு சனிக்கிழமை நினைத்தது

கிழமை தவறாமல்

சனிக்குச் சனி

கோவிலுக்கு

எள்கொண்டு போகிறாள் தேவானை

ஏனென்று கேடேன்

புருஷனுக்கு ஏழரையாம்

சாத்திரியார் சொன்னாராம்

சனிபிடித்து ஆட்டுதென்று

யார் பிடித்து ஆட்டினும்

சனீஸ்வரரின்

பாடு பிழையில்லை

ஏழரை அட்டமம் என்று

எவரேனும் வருவார்கள்

ஒன்பதுபேர் நடுவே

ஒளிருகிற சூரியனில்

சந்திரனிற் காட்டிச்

சனீஸ்வரருக்கு மட்டும்

சரியான மரியாதை

சண்டியரைத் தேடிச்

சன்மானம் போகிறது

நல்லபடி இருந்தால்

நாலுபேர் மதியாரக்ள்

உமைப்பார்த்துத்

தம்தலையில்

குட்டுகிற பேரும்

குருக்களுமாய்ச் சேர்ந்து

உம்தலையில் இரண்டு

சாத்துவார் என்றோ

முன்னாலே குந்தி

முழித்திருக்கும் கருங்கல்லுப்

பிள்ளையார் நீரும்

இடையிடையே சேட்டையில்

இறங்குகிறீர்

சொல்லும்.

----------------------------------------------------------------

நல்வரவு

லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு

குடிவரவு, பொதிமண்டபம் இவ்வழி

மஞ்சட் ஓட்டுக்கு இப்பால் வரிசையில் நில்

கடவுச்சீட்டு? நுழைவுப்படிவம்?

(கண்களால் மேலுங் கீழுந் துளாவல்)

இது உன்னுடைய கடவுச்சீட்டா?

விஸா எங்கு பெற்றாய்?

கொஞ்சம் பொறு

யாருடன் நிற்கிறாய்? முகவரி? தொலைபேசி?

எத்தனை நாள் நிற்கிறாய்? ஏன்? எதற்கு?

விமானப் பயணச்சீட்டை எடு

கொஞ்சம் பொறு

மஞ்சட் கோட்டுக்குப் பின்னால் நில், ஓரமாக

அடுத்த ஆள்

அடுத்த ஆள்

அடுத்த...

நீ வரலாம்

அந்தப் பக்கமாக

வைத்தியபரிசோதனைக்குப் போ

சட்டையைக் கழற்று

எக்ஸ் கதிர் இயந்திரத்தின் முன் நில்

மூச்செடு, முதுகை நிமிர்த்தி நெருங்கி நில்

கொஞ்சம் பொறு

இந்தா உன் கடவுச்சீட்டு

நீ போகலாம்

பொதி மண்டபம் இவ்வழி

தனியே சுற்றி வரும் பெட்டி

தள்ளுவண்டில்

சுங்கப்பகுதி இவ்வழி

தீர்வைக்குரியது எதுவுமில்லையேல்

பச்சை வண்ணப் பக்கமாகப் போ

சற்றே நில்

உன்னைத் தான்

அங்கெயே நில்

எங்கிருந்து வருகிறாய்?

எங்கு விமானம் ஏறினாய்?

அதற்கு முன்பு எங்கு நின்றாய்?

இங்கு எத்தனை நாள்?

என்ன அலுவல்?

யாருக்காகவும் ஏதேன் கொண்டு

வருகிறாயா?

பெட்டியை நீயே அடுக்கினாயா?

பெட்டியைத் திற

எதையும் தொடாதே

பெட்டியை மூடு

என்னுடன் வா

இந்த அறைக்குள் நுழை

கைகளை உயர்த்து

சட்டையைக் கழற்று

எல்லாவற்றையும்

சப்பாத்தையும் தான்

கால்களை அகல விரி

(கைகளால் உள்ளும் புறமும் துழாவல்)

சரி, சட்டையை மாட்டு

நீ போகலாம்.

வெளியே செல்லும் வழி

லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு

கறுப்பு......!

----------------------------------------------------------------

விபசாரம்

தோட்டத்து வளவில் மண் கிளறும் வாலிபனை

வேலி மறைக்கும்.

துலா மிதிக்கும் உருவமோ

வேலி தாண்டி விஸ்வரூபமாய்க்

கட்டாய்க் கரிதாய் கண்ணில் விழும்.

பவுடர் பூசிய ஒட்டுமீசைக் கதாநாயகனை விட

நிசமான ஆண்பிள்ளை

வளவுப் பனையிலும் ஏறுவான்.

ஆண்களைப்

பாராதே பேசாதே நினையாதே!

அண்ணன் (காவலாள்) அருகாய் நடப்பான்.

சைக்கிளில் தொடரும் இளைஞனைக்

காவாலி என்று ஏசுவான்.

வயதுக்கோளாறு

சந்தியிலே நின்று கண்சிமிட்டும் வாலிபத்தின்

சட்டைப்பொத்தான்களைத் தளர்த்தும்.

கடிதம் தருவதற்கு வந்தவனின் கையை

நடுக்கும்.

சினேகிதிகளின் முற்றல் அரட்டைகள்.

பாராதே பேசாதே

பருவமும் வயதும் மீறாத ஆணைகள்..

நினைவு மதில் தகர்க்கும்.

விதவிதமாய் கனவுகள்

இடையிடையே விரஸமாய்.

காசுங் காணியும் நகையுந் தந்தாற்

கல்யாணமென்று வந்தாய் வாங்கினாய்

கனவுகள் தூர்ந்தன.

புதைந்த நினைவுகளில்

வந்து போன ஒருவன் தவறாமல்

இன்பம் நுகர்ந்தே இருந்தாலும்

இல்லாதவாறு

உன்னோடு தூங்கி

எழும் ஒவ்வோர் விடியலிலும்

ஏனிந்த அருவருப்பு?

----------------------------------------------------------------

சிறை: இரகசியம்

பெரியக்காவுக்கு வயது வந்தது

முட்டை நல்லெண்ணெய் முழுக்காடு சேலை

சடங்கு உறவு சுற்றம் விருந்தோம்பல்

சண்டை தகராறு வந்து முடிந்தன

விளையாட்டுப் போனது

பள்ளிப் படிப்பும் மெல்ல ஒழிந்தது

வீடே அடைக்கலமாய்ச்

சிறை வீடாய் ஆனது

தரகர் சீதனம் அன்பளிப்பு நகை நட்டு

சாதகங்கள் சாதி

படிப்பு தொழில் பென்ஷன்

நம்பிக்கை ஏமாற்றம்

மீண்டும் தரகர்

விலைபேசல் பேரங்கள் நம்பிக்கை ஏமாற்றம்

பொய் புளுகு சோதிடம்

மீண்டும் பேச்சுப் பேரங்கள் பொய்கள்

வழக்கறிஞர் பதிவாளர் சாத்திரியார் ஐயர்

பெரியக்காவுக்குக் கல்யாணம் வந்தது

முழுக்காடு சேலை தாலி புருஷன்

சடங்கு உறவு சுற்றம் விருந்தோம்பல்

சண்டை தகராறு அழுகை சமாதானம்

எங்கள் சிறைவாசம் ஒழிந்து

பெரியக்கா போனாள்

சின்னக்காவுக்கு வயது வந்தது

முட்டை நல்லெண்ணெய் சடங்கு சிறைவாசம்

தரகர் சீதனம் பதிவாளர் புருஷன்

சிறைவாசம் ஒழிந்து சின்னக்கா போனாள்

எனக்கு வயது வந்தது

முட்டை முழுக்காடு சேலை சிறைவாச்ம்

தரகர் அன்பளிப்பு சீதனம் தாலி

எங்கள் வீட்டுச் சிறைவாசம் ஒழிந்து

வேறோர் வீட்டுச் சிறைக்குள் அடைபட்டேன்

அம்மா அறியாளோ

அக்காமார் அறியாரோ

ஆரும் எனக்கு சொல்ல மறந்தாரோ

----------------------------------------------------------------

முறுவல் முக்கியமானது

வாடிக்கையாளர் சொல்வது எப்போதுஞ் சரி

எனவே வாதாடி

மறுவார்த்தை பேசாதே

முகத்தில் முறுவலை நிலை நிறுத்து

காசுப் பொறியிற் சில்லறை குறைந்தாற்

குற்றம் உன்னுடையது

இயதிறம் பொய் சொல்லாது.எசமான் யோக்கியன்

மறுப்பதற்கு முயலாதே.

இரண்டு நாள் ஊதியம் கழிபடலாம்.

ஆனாலும்

முகத்தில் முறுவலை மறைய விடாதே

பிட்டத்திற் கிள்ளுபவனும்

இடையை வருடுபவனும்

எசமானுக்குத் தெரிந்தோராய் இருக்கலாம்

எதையும் பொருட்படுத்தாதே

எவரிடமு சொல்லாதே

குற்றம் நிச்சயமாய் பெண்ணுடையது

எனவே முகம் சுழியாதே

முறுவல் முக்கியமானது

பத்து மணி நேரம் பிழிந்து

முறையாக

எட்டு மணி நேரப் படியளக்கும் எசமானன்

காலத்தின் காவலன் கண்ணியவான்

காசுப் பொறியருகே தேனீரும் தருகிறவன்

வீணாகப்பகையாதே.

முறுவலிக்க மறவாதே.

வேலை முடிந்தவுடன் விரைவாக வீடு போ

சமைத்துப் போட்டாற் சாப்பிட்டுக் குறை சொல்லப்

புருஷன் இருக்கிறான்

அடித்தாலும் உதைத்தாலும் முறுவலிக்கத் தவறாத

பெண்ணே

வழிவழியே

கண்ட நின்ற பேரோடு கதையென்ன சிரிப்பென்ன

நேராக வீடு போ

மீண்டும் முறுவலிக்க.

----------------------------------------------------------------

எல்லாந் தெரிந்தவன்

அவனை

ஒரு கலந்துரையாடலின் போது சந்தித்தேன்.

பெண் விடுதலை பற்றியும்

பெண்களின் சமத்துவம் பற்றியும்

நீளமாய் நிறையவே பேசினான்.

ஆணாதிக்கம், வர்க்கச்சுரண்டல், ஒடுக்குமுறை,

போராட்டம், புரட்சி, சோஷலிஸம்,

பொதுவுடமைப் புதுவுலகம்

பற்றியும் பேசினான்.

பெண்களின் பிரச்சனைகள்

கருத்தடை, கருக்கலைப்பு,

ஆண்களின் அடியுதை, நிந்தனைகள்,

பாலியல் வன்முறை, பலாத்காரப் பாலுறவு

தொடர்பாகப் பேசப்

பெண்கள் வாய்திறந்த போது

அவர்கட்கு எதுவுமே தெரியாது என்றான்.

புரட்சி வந்தவுடன்

எல்லாமே சரியாகி விடுமென்று

மேசையிலே

ஓங்கி அடித்து உரக்கக் கூவினான்.

பெண்களின் பிரச்சனைகள் பற்றி

எந்தப் பஎண்ணையும் விட

அவனே

நன்றாக அறிவான்.

அவன் சொல்லும் புரட்சி வந்தபின்

எல்லாமே சரியாகி விடும்.

மாத விடாயும்

பிரசவ வலியுங் கூட

இல்லாது போய்விடும்.

ஏனென்றால், அவன்-

----------------------------------------------------------------

விடுதலையின் விலை

சகோதரி,

குறுகத் தறித்து அழகாக வாரி மெழுகிட்ட உன் கூந்தலும்

மிடுக்கான ஆடைகளும்

எடுப்பான நிமிர்ந்த நடையும்

உன் சமத்துவத்தின் பிரகடனங்கள்.

போதாமல்,

மேலும் விளக்குவதற்காகப்

புகைமூலஞ் சைகைகள் விடுகின்றாய்.

விறகடுப்பை ஊதிய பழைய பரம்பரையின்

புகைச் சல்கைகளினின்றும்

இவை வித்தியாசமானவை - மிகவும்.

நீ

அச்சமற்று உரத்துச் சிரிப்பதும்

அடங்குதற்கு மறுப்பதும்

எதிர்வாதம் புரிவதும்

பெருமைக்குரிய வெற்றிகள்.

ஆயினும்

வண்ணக்கலவை பூசிய உன் கண்ணிமைகளும்

பிடுங்கிச் செப்பனிட்ட உன் புருவமும்

பூச்சும்

காதிலுங் கழுத்திலுஞ் சிலசமயங் கைகளிலுங்

கிடக்கும் நகைகளும்

விடுதலைபெறாத பிரதேசங்கள் சில

உன்னுள் இன்னமும் உள்ளதாகவே

சொல்கின்றன.

அனைத்திலும் முக்கியமாக,

உன் வீட்டுக் குசினிக்குள்ளும்

தோட்டத்திலும்

பிள்ளைப் பராமரிப்பிலும்

குறைந்த கூலிக்கு முறிகின்ற அவளும் அவனும்

உனது விடுதலையை உறுதிப்படுத்தவில்லை

உறுதியாக,

அவர்கள் விடுதலை பெறாமல் உனக்கும் விடுதலையில்லை.

----------------------------------------------------------------

ஒரு மரணம்

அவன் குண்டு வெடிப்பில் இறந்து போனான்.

குண்டு வெடித்த இடத்திற்

குருதியும் தசையும் சிதறிக் கிடந்தது.

துண்டுககளைப் பொறுக்கியெடுத்துப்

பெட்டியிற் பொருத்தி வைத்தார்கள்-

தைலமிடுவோர் திறமைசாலிகள்; ஆனால்

உயிர்கொடுக்கும் வித்தைதான் தெரியாது.

இறந்தவனுடைய மனைவியும் பிள்ளைகளும்

கதறி அழுதார்கள்.

சூழநின்றவர்கள் தங்கள் கண்களைத் துடைத்தபடி

ஆறுதல் சொன்னார்கள்.

என்னுடைய சினேகிதனின் தாய்

எல்லாப் படங்களையும் புதினத் தாளிற் பார்த்தாள்.

அவள் அழவில்லை

அவளுடைய மகனுடைய மரணத்திற்குக் காரணமானவன்

இறந்து விட்டான்.

அவள் சிரிக்கவுமில்லை.

எந்த மரணமும் அவளது மகனை

உயிர்ப்பிக்கப் போவதில்லை.

ஒரு கொலைஞனின் மரணம் கொலைகளின் மரணமில்லை-

ஆனாலும்

அயலில் இரவிரவாய்ச் சீன வெடிகொளுத்திய சத்தம்

இன்னமும் காதில் ஒலிக்கிறது.

வாழ்க்கை கொண்டாட்டமாக இல்லை-

எனவே

ஒரு மரணத்தையாவது கொண்டாடுகிறார்கள்.

----------------------------------------------------------------

அவன் என்னை நேசிக்கிறான்

எப்போதும் அவன் என்னைக்

கண்ணே மணியே என்கிறான்

இடையிடையே

கரும்பே தேனே எனவுங்

காதல் மயக்கத்திற்

கிளியே எனவும் அழைக்கின்றான்

உண்மையாய்

அவன் என்னை நேசிக்கிறான்

என்னைப்

பொன்னாலும் பட்டாலும் அலங்கரித்துக்

கை கோத்து

எல்லார் முன்னாலும் நடக்கின்றான்

என் அழகையும் சமையலையும்

வீடு நடத்தும் திறமையையும்

எல்லார் முன்னாலும் புகழ்கின்றான்

உறுதியாய்

அவன் என்னை நேசிக்கிறான்

என்

மேனி முழுதும் முத்தங்கள் பொழிகிறான்

இறுகத் தழுவுகிறான்

மெல்லத் தடவிச்

சிலிர்த்திடவுஞ் செய்கிறான்

வாய்ப்புக் கிடைக்கும்

ஒவ்வொரு தடவைக்கும்

வாய் நிறையச் சொல்கிறான்;

"கண்ணே உன்னை நேசிக்கிறேன்"

நிச்சயமாய்

அவன் என்னை நேசிக்கிறான்

என்

ஆசைகள் பற்றியும்

எதிர்காலம் பற்றிய என்

எண்ணங்கள் பற்றியும்

பேசினால்

என்னைக் கட்டி அணைத்து

முத்தத்தால் வாய்மூடிப்

பண்பாடு பற்றிப் பாங்காகப் பேசுகிறான்

கண்போன்றோ மணிபோன்றோ

சுவைக்கின்ற

கரும்போ தேனோ போன்றோ

இல்லாது போனாலும்

ஒன்று மட்டும் நான் அறிந்தேன்

அவன் என்னை நேசிக்கிறான்

சிறகு செதுக்கிக்

கூண்டில் இருத்தி

அழகு பார்க்கும்

கிளிபோல

அவன் என்னை நேசிக்கிறான்

----------------------------------------------------------------

சுபவேளை

சுபவேளை பார்த்தே சுவாசமும் செய்வார்

சுபவேளை பார்த்தே சுடலைக்கும் போவார்

சோதிடர் கூடிச்

சுபவேளை பார்த்துப் பிறந்தது

இந்தச் சுதந்திர பாரதம்

நள்ளிரவில்

சுபவேளை பார்த்தோ கற்கள் சுமந்தனர்

சுபவேளை பார்த்தோ கடப்பாரை தூக்கினர்?

மஹான்களும் மஹாரிஷிகளும்

அவதாரங்களும் மடாதிபதிகளும்

ஆசி வழங்கச்

சுபவேளை பார்த்தோ வளர்த்தனர்

இந்த இந்துமதவெறி யாகநெருப்பை

சுபவேளை பார்த்தோ

பாபர் மசூதியை இடித்து விழுத்தினர்?

சுபவேளை பார்த்தோ

சும்மா இருந்தது பாரத அரசு

சுபவேளை பார்த்தோ

பற்றி எரிகுது பார பூமி?

(பம்பாயில் இனக்கலவரம் கொழுந்து விட்டெரிகையில் முகூர்த்தம் சரியில்லை என்று பிரதமர் நரசிம்மராவ் அங்கு போவதைத் தவிர்த்தார் என்று செய்தி ஒன்று செய்தியானது.)

----------------------------------------------------------------

புனிதமானவை

கோயில் புனிதமானது

கொடி மரம் புனிதமானது

சிலுவை புனிதமானது

செபமாலை புனிதமானது

மசூதி புனிதமானது

தொழுகை புனிதமானது

குருத்வாரம் புனிதமானது

விகாரை புனிதமானது

ஆறும் கேணியும்

ஆலும் வேம்பும்

அரசும் வில்வமும்

அறுகும் புனிதமானவை

மேய்கிற பசுவும் புனிதமானது

மழித்த தலையும்

நிறைந்த சடையும்

நிர்வாண மேனியும்

பூணூலுங் காவியும்

வெள்ளை மேலங்கியும்

தொழுகைக்கு விரிக்கின்ற

பாயும் புனிதமானவை

பூசையும் சடங்கும்

தானமும் நோன்பும்

தியானமும் திருவிழாவும்

நேர்கடனும் புனிதமானவை

சமயஙக்ள் புனிதமானவை

சரித்திரங்கள் புனிதமானவை

யுத்தங்கள் புனிதமானவை

மரணம் புனிதமானது

மதத்தின் பேராலே

செய்கின்ற

கொலையும் புனிதமானது

புனிதமான பாரத பூமியில்

மனித உயிரை விட

யாவுமே புனிதமானவை

----------------------------------------------------------------

புதியபூமி

(மாஓ நூற்றாண்டு அஞ்சலி)

பல்லவி

இது எங்கள் பாதை இது எங்கள் பயணம்

இது எங்கள் நீண்ட பயணம்

அனுபல்லவி

புதியதொரு தருமம் புதியதொரு நீதி

புதியதொரு பூமி செய்வோம்

பொதுமை நெறியாகச் சமதருமம் என்னும்

பாதையினை உறுதி செய்வோம்

சரணங்கள்

வலியவர்கள் வாழ மெலியவரக்ள் வாடும்

வகைகளினி ஒழிக என்போம்

பலமிழி பண்பாடும் பல இனமும் நாடும்

பகைமையற ஒருமை காண்போம்

உலகவரலாற்றை உருவாக்குஞ் சக்தி

உழைக்கின்ற மாந்தர் கண்டோம்

கலக வழி நீதி விளைகிறதன் உண்மை

காலத்தின் நியதி கண்டோம்

அடிமைமுறை சாய அதிர எழும் மாந்தர்

ஐக்கியம் உலகை வெல்லும்

கொடியவரின் அரசும் ஆயிதமுந்துணையும்

காகிதப் புலிகள் ஆகும்

பொருதிடத் துணிந்தார் தோல்விகளிற் சோரார்

போராடும் மக்கள் ஓயார்

சிறுபொறியில் மூளும் பெரியதொருதீயில்

தருமமதன் சோதி வீசும்

தளைகளென அல்லாற் களைய எதுமில்லார்

காண ஒரு புதிய பூமி

விளையுமொரு போரில் விடுதலையை வெல்வார்

மானுடர் மேன்மை காண்பார்.

----------------------------------------------------------------